Monday, April 24, 2017

தமிழ்த்தாய் வாழ்த்து - தெரிந்ததும் தெரியாததும்


 தமிழ்நாட்டின்  மாநில கீதமாக கருதப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய மனோன்மணீயம் என்ற நாடகத்தின் தொடக்கத்தில் வரும் தமிழ்த் தெய்வ வணக்கத்தின் சுருக்கமேயாகும். அது கீழ்வருமாறு:

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே

மனோன்மணீயத்தில் இடம்பெறும் தமிழ்த் தெய்வ வணக்கத்தில்  மேலே கொடுத்துள்ள வரிகளை தவிர இன்னமும் நிறைய வரிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே

பல உயிர்களையும், உலகங்களையும் படைத்தது, காத்து, அழிக்கும் பரம் பொருள் தான் மட்டும்  ஒரு மாற்றமும் இல்லாமல் எப்பொழுதும் அதேபோல் இருக்கிறது. அதேபோல கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகளுக்கு தாயாய் திகழும் தமிழ், ஆரிய மொழி (Sanskrit) போல் உலக வழக்கத்திலிருந்து அழியாமல் என்றும் இளமையுடன் இருப்பதைக்கண்டு  எல்லோரும் வியந்து வாழ்த்துவதாக கவிஞர் எழுதியுள்ளார். அவர் கூறுவதைப்போல் சமஸ்க்ரிதத்தின் ஆளுமை வெகுவாக குறைந்துள்ளது என்பது உண்மையே. ஆனால் தமிழ் மொழிதான் பிற தென்னிந்திய மொழிகளுக்கு ஆதாரம் என்பது விவாதத்துக்குரிய விஷயம்.

மேலும் சில வரிகளை காண்போம் 

வள்ளுவர்செய் திருக்குறளை மறு வற நன்குணர்ந்தோர்கள்  
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கொருநீதி 
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள் 
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ 

இங்கே ஆசிரியர் திராவிடர்கள் ஆரியர்களைவிட சிறந்தவரென்பதற்க்கு  மேலும் சில சாட்சியங்களை வைக்கிறார். திராவிட திருக்குறளை நன்கறிந்தவர் எவரும் ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று உரைக்கும் ஆரியர்களின் மநுதர்மத்தை  ஏற்கமாட்டார்கள்  என்று கூறுகிறார். மனதையுருக்கி தீயஎண்ணங்களை போக்கும் குறளில் லயித்தவர்கள், கண்களை மூடிக்கொண்டு மீண்டும் மீண்டும் அதே (ஆரிய) வேதத்தை ஓத மாட்டார்கள் என்று கூறுகிறார். 

மேற்கண்ட வரிகளிலிருந்து திரு சுந்தரம் பிள்ளை திராவிட நாட்டின் மேல் மிகுந்த பற்று கொண்டிருந்தார் என்பதும் , ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்தார் என்பதும் தெளிவாகிறது.